Sunday, December 12

முதல்வரின் கோவை பயணம் திடீர் ரத்து : விடுதியை விட்டு வெளியேறவில்லை ராஜா

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் சென்னையில் நேற்று பரவியது. இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியின் கோவை பயணம் திடீரென ரத்தானதாலும், சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜா முகாமிட்டிருந்ததாலும் காலை முதல் இரவு வரை பரபரப்பு தொடர்ந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., தனது விசாரணையை துவக்கி, முதற்கட்டமாக தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது செயலர்கள், உதவியாளர், நண்பர், சகோதரர் என பலரது வீடுகள் என சென்னை, டில்லி உள்ளிட்ட 14 இடங்களில் ரெய்டு நடத்தியது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப்பிரிவினர் நடத்திய இந்த ரெய்டு, தி.மு.க., தரப்பில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், "ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சி.பி.ஐ., ரெய்டின் போது டில்லியில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜா, 10ம் தேதி நள்ளிரவு சென்னை திரும்பினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை ராஜா சந்தித்துப் பேசினார்.ராஜா வீடுகளில் நடந்த ரெய்டைத் தொடர்ந்து, சி.பி.ஐ., எந்த நேரத்திலும் ராஜாவை விசாரணைக்கு அழைக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில், அரசு விழா மற்றும் தனியார் ஓட்டல் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று கோவை செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், நேற்றைய கோவை பயணம் திடீரென ரத்தானது.அதற்கு பதிலாக, நேற்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் கோவை, "நிப்ட்' மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவையும், மாலை "லீ மெரிடியன்' புதிய ஓட்டலையும் திறந்து வைத்தார்.


தொடர் வதந்திகளால் பரபரப்பு:முதல்வரின் கோவை பயணம் ரத்தானதாலும், ராஜா சென்னையில் தங்கியிருந்ததாலும் மாநிலம் முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கும் என்று பலரும் பேசினர்.சென்னையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஆளுங்கட்சியினரும், அரசியல் பிரமுகர்களும் பெரும் ஆர்வம் காட்டினர். பத்திரிகையாளர்களும் முதல்வரின் வீட்டருகே குவிந்தனர். ஆனால், சோதனை விவகாரம் புரளி என்று தெரிய வந்தது.சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் ராஜா, முதல்வர் கருணாநிதியை சந்திக்கப் போவதாக அடுத்த கட்டமாக தகவல் பரவியது. ஆனால், நேற்று மாலை வரை விருந்தினர் விடுதியை விட்டு, ராஜா வெளியே வரவில்லை

No comments: