சூர்யா ஸ்பெஷல் :
பொறுப்புள்ள மகன், அன்பான அப்பா, காதலான கணவன், சிறந்த நடிகர்... அத்தனைக்கும் உதாரணமாக இருக்கும் சூர்யாவைப் பற்றி குட்டி க்யூட் தகவல்கள்...
பார்ட்டி, ட்ரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா. ஷூட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என செட்டில் ஆவதையே விரும்புவார். கேட்டால், 'அப்பாவும் இப்படித்தானே இருந்தார்!' என்பார்.
முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்து விடுபவர். நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும்.
காலையில் ஹெல்த் ட்ரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள். மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள். மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி. இதுதான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா!
பொள்ளாச்சி பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில்களுக்குச் சொந்தக்காரர் சூர்யா.
அவரது புதுப் படம் வெளியாகும்போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார்!
சூர்யாவின் தி.நகர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும், இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா!
30 வருடங்களுக்கு மேலாக சிவகுமார் குடும்பத்தின் டிரைவராகப் பணிபுரிந்து வரும் சண்முகத்தின் மீது சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் மிகுந்த மரியாதை.
தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார்!
ஸ்கூலுக்கு அடிக்கடி சென்ற 12B பஸ்ஸில் இப்போது ஒரு ஜாலி ட்ரிப் அடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசை. ஆனால், 'வேண்டாம்... கூட்டம் சேர்ந்து எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கும்!' என்று நண்பர்கள் அவரை அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். 'ஒருநாள் உங்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிட்டு, ஜாலி ட்ரிப் அடித்தே தீருவேன்!' என்று பந்தயம் கட்டியிருக்கிறார் சூர்யா.
10 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்க வேண்டுமென்பது சூர்யாவின் கனவு. இப்போதே ரீ- ரிக்கார்டிங், கதை விவாதம், எடிட்டிங் எனப் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறார்.
உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ். ஷூட்டிங் கேன்சலானால் அந்தப் படங்கள்தான் சூர்யாவின் ஹோம் தியேட்டரில் கதை பேசும்!
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜானின்போது வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். 'சினிமா ஸ்டார் ஆயிட்டோம்னு நண்பர்களை மறக்க முடியாதுல்ல!' என்பார்!
சூர்யாவிடம் இருக்கும் நான்கு கார்களின் பதிவு எண்களும் 5005 தான்!
சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. 'தேவர் மகன்' படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா!
சூர்யா கௌரவ நடிகராக நடித்த படங்கள் 'ஜூன் ஆர்', 'மன்மதன் அம்பு', 'கோ', 'அவன் இவன்', 'சென்னையில் ஒரு நாள்'. ரஜினிக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் 'குசேலன்'!
எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா. வயதில் மூத்தவர்களை 'அண்ணே' என்பார். மிகவும் நெருக்கமானவர்களைத்தான் பெயர் சொல்லி அழைப்பார்!
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மா சென்ட்டிமென்ட்டில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடந்துகொள்வார்!
ஒருமுறை செப்டம்பர் 11 அன்று காரைக்குடி ஷூட்டிங்கில் இருந்த சூர்யா, இயக்குநரிடம் அனுமதி வாங்கி, விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து, பகல் பொழுதை வீட்டில் கழித்துவிட்டு, மீண்டும் அன்றிரவே காரைக்குடி ஷூட்டிங்குக்குத் திரும்பிவிட்டார். காரணம், அன்றுதான் சூர்யாவுக்குத் திருமண நாள்.
தேசியக் கட்சி நடத்திய சர்வேயில் முதல் இடத்தில் வந்தவர் சூர்யாதானாம். ஆனால், அவர்கள் விடுத்த அழைப்புக்கு, 'ஆளை விடுங்க சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி இருக்கிறார்!
சூர்யா சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களில் நண்பர்கள், உறவினர்கள் போக கட்டாயமாக அழைப்பு அனுப்பப்படும் இரண்டு நண்பர்கள் விஜய், அஜீத்!
No comments:
Post a Comment